செந்தமிழ்சிற்பிகள்

மயிலை சீனி.வேங்கடசாமி  (1900-1980)

மயிலை சீனி.வேங்கடசாமி  (1900-1980)

  அறிமுகம்

தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

சென்னை மயிலாப்பூரில் (1900) பிறந்தவர். தந்தை சித்த மருத்துவர். பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்களைத் தேடித் தேடி சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்டவர். வேங்கடசாமிக்கும் இயல்பிலேயே தமிழில் அதிக ஆர்வம் இருந்தது.

தமிழறிஞர் கோவிந்தராஜன், மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டிதர் சற்குணர் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப் பள்ளி, சென்னை கலைக் கல்லூரியில் படித்தார். ஓவியக் கலையில் இருந்த ஆர்வத்தால், கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, எழும்பூர் ஓவியப் பள்ளியில் சேர்ந்தார்.

சாந்தோம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிடன்இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார். குடியரசு, ஊழியன், செந்தமிழ், ஆனந்தபோதினி, ஈழகேசரி உள்ளிட்ட இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

தமிழ்நாட்டு வரலாறுஎன்ற நூலில் இலங்கையில் தமிழர் என்ற இவரது ஆய்வுக் கட்டுரையும் இடம்பெற்றது. தமிழக வரலாற்றைக் கட்டமைத்து, ஒழுங்குபடுத்தியதில் முக்கியப் பங்காற்றியவர். பழங்கால ஓவியங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தமிழ், தமிழர் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை, இலக்கியம், இயல், இசை, நாடகம் என இவர் ஆய்வு மேற்கொள்ளாத துறைகளே இல்லை.

 தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தலைமுறைக்குத் தமிழ் முதலாக்கிக்கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச் சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன்என்று பாவேந்தர் பாரதிதாசன் இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

படைப்பாளி, வரலாற்று அறிஞர், சொல்லாய்வு நிபுணர், கல்வெட்டு, சாசனம், தொல்லியல் களங்களில் முத்திரை பதித்தவர், பன்மொழிப் புலவர், சமூகவியல் அறிஞர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி 80-வது வயதில் (1980) மறைந்தார்.

படைப்புகள்

1936 - கிறித்தவமும் தமிழும்

1940 - பௌத்தமும் தமிழும்

1943 - இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்)

1944 - இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல்

1950 - மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல்

- மகாபலிபுரத்து ஜைன சிற்பம்

1952 - பௌத்தக்கதைகள்

1954 - சமணமும் தமிழும் (முதற்பகுதி)

1955 - மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு

1956 - கௌதம புத்தர்

- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

1957 - வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்

1958 - அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

- மூன்றாம் நந்திவர்மன்

1959 - மறைந்துபோன தமிழ் நூல்கள்

- சாசனச் செய்யுள் மஞ்சரி

1960 - புத்தர் ஜாதகக் கதைகள்

1961 -மனோன்மணியம் - பதிப்பு

1962 - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்

1965 - உணவுநூல்

1966 - துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு)

- சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி)

1967 - இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

- நுண்கலைகள்

1970 - சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

1974 - பழங்காலத் தமிழ் வாணிகம் (சங்க காலம்)

- கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் கி.பி.250 வரையில்)

1976 - களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

1977 - இசைவாணர் கதைகள்

1981 - சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள்

1983 - தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள்       4,5,6,10 மட்டும்)